குறிஞ்சித்தேன் – தமிழ்ப் பாடநூல் / முதல் பருவம் / 2018
அ. இக்காலக் கவிதைகள்
பாரதியார் – கண்ணன் பாட்டு
1.
கண்ணன் - என் சேவகன்
பாரதி கண்ட சேவகனின் பண்பு
வீட்டு வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தாலும் அவர்களால்
ஏற்படும் தொல்லைகள் கணக்கில்லை. கூலி அதிகம் வேண்டுமென்பார்கள். அப்படிக் கேட்கும்
போதெல்லாம் கொடுத்த அனைத்தையும் மறந்து நன்றி கொல்வார்கள். ஒரு நாள் வேலை அதிகமாக வைத்திருந்தால்
வேலைக்கு வராமல் வீட்டிலேயே உட்கார்ந்து கொள்வார்கள். மறுநாள் வரும்போது, ஏனடா நேற்று
நீ வேலைக்கு வரவில்லை என்று கேட்டால் போதும்… எத்தனை பொய்! பானைக்குள் இருந்து ஒரு
தேள் பல்லால் கடித்து விட்டது என்பார். வீட்டில் பெண்டாட்டி மீது பூதம் வந்து விட்டது
என்பார். பாட்டி செத்துப்போய் பன்னிரண்டாவது நாள் என்பார். ஓயாமல் பொய் கூறுவார், ஒரு
வேலையைச் சொன்னால் அதற்கு மாறாக வேறு வேலையைச் செய்வார். தாயாதியர்களோடு தனியாகச் சென்று
பேசுவர்; நம் வீட்டுச் செய்திகளையெல்லாம் ஊரெல்லாம் சென்று பறை அடிப்பது போல் விளம்பரம்
செய்வர்; வீட்டில் மிகச்சாதாரணமான பொருளான எள் இல்லை என்றால்கூட, விஷயம் தெரியுமா அவர்கள்
வீட்டில் எள் இல்லை என்று பிரச்சாரம் செய்வார். இப்படி வேலைக்காரர்களால் மிகவும் சிரமப்
பட்டுக் கொண்டிருந்த போதும், சேவகர்கள் இல்லாமல் வேலை நடக்கவில்லை.
சேவகனாக வந்த கண்ணன்
இப்படி நான் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ ஒருவன்
வந்து சேர்ந்தான், என்னிடம் வந்து நான் இடைச்சாதியைச் சேர்ந்தவன், மாடுகன்றுகளை மேய்ப்பேன்,
வீட்டிலுள்ள பிள்ளை குட்டிகளைக் காப்பேன். வீடு பெருக்குவேன், விளக்கேற்றி வைப்பேன்,
நீங்கள் சொல்லும் வேலைகளையெல்லாம் அட்டியின்றி செய்வேன்; துணிமணிகளை துவைத்து காயவைத்துப்
பத்திரப்படுத்தி வைப்பேன், வீட்டிலுள்ள கைக்குழந்தைகளுக்கு இனிமையான பாட்டுப்பாடி ஆட்டங்கள்
ஆடி அவை அழாதபடி பார்த்துக் கொள்வேன். வெளியூர் செல்லவேண்டும் என்றால் அது காட்டு வழியாக
இருந்தாலும், வழியில் திருடர் பயம் இருந்தபோதும், இரவோ, பகலோ எந்த நேரமாக இருந்தாலும்
சிரமத்தைப் பார்க்காமல் தேவரீர் தம்முடன் வருவேன். உங்களுக்குத் துன்பம் எதுவும் ஏற்படாமல்
காப்பேன். ஐயா, நான் எதுவும் படித்ததில்லை, நாட்டுப்புறத்தில் வளர்ந்த காட்டு மனிதன்.
இருந்தாலும் எனக்குச் சில வித்தைகள் தெரியும். சிலம்பம் சுற்றுவேன், மல்யுத்தம் தெரியும்,
குத்துப் போர் தெரியும், ஆனால் நயவஞ்சனை புரிய எனக்குத் தெரியாது. இப்படிப் பலப்பல
சொல்லிக்கொண்டு நின்றான். "அது சரி உன் பெயர் என்ன? சொல்" என்று கேட்டதற்கு,
" ஐயனே! ஒண்ணுமில்லே கண்ணன் என்று ஊரில் உள்ளோர் சொல்வார்கள்" என்றான். அவனை
ஏற இறங்கப் பார்த்தேன். நல்ல கட்டான உடல். கண்களில் நல்ல குணம் தெரிந்தது. அன்பும்
பாசமும் பொங்க அவன் பேசும் சொற்கள் இவைகளால் 'சரி, இவன் நமக்கு ஏற்ற பணியாள்' என்று
மனம் மகிழ்ந்து "தம்பி! நன்றாகத்தான் பேசுகிறாய், உன்னைப் பற்றி வானளாவப் புகழ்ந்து
கொள்கிறாய், அது கிடக்கட்டும் கூலி எவ்வளவு கேட்கிறாய்? சொல்" என்று கேட்டதற்கு
அவன் சொல்லுகிறான். "ஐயனே! எனக்கு தாலிகட்டிய பெண்டாட்டியோ, பிள்ளை குட்டிகளோ
எவரும் கிடையாது. நான் ஒரு தனிக்கட்டை. எனக்கு நரையோ, உடலில் சுருக்கமோ ஏற்படவில்லையாயினும்
எனக்கு ஆன வயதுக்கு அளவில்லை, தேவரீர் என்னை ஆதரித்தால் போதும், நீங்கள் தரப்போகும்
காசு எனக்குப் பெரிசில்லை, நெஞ்சிலுள்ள அன்புதான் எனக்குப் பெரிசு" என்றான். சரி
சரி இது ஓர் பழையகால பைத்தியம், பிழைக்கத் தெரியாதவன் என்று எண்ணிக்கொண்டு, மனத்தில்
மகிழ்ச்சியோடு, அவனை நான் எனது பணியாளாக ஏற்றுக் கொண்டு விட்டேன். அன்று முதல் அவனுக்கு
எங்கள் மேல் அன்பு அதிகமாகிக்கொண்டே வரத்தொடங்கியது. அவனால் நாங்கள் அடையும் நன்மைகளைப்
பட்டியலிட்டுச் சொல்லமுடியாத அளவுக்கு அதிகம். கண்களை இமைகள் எப்படிக் காக்கின்றதோ
அப்படி அவன் எனது குடும்பத்தைக் காக்கின்றான். ஒரு தடவையாவது வேலையில் சலிப்படைந்து
முணுமுணுப்பதைக் காணவில்லை. வீடு வாசல் பெருக்குகிறான், வீட்டை நன்கு துடைத்து சுத்தம்
செய்கின்றான், வேலைக்காரிகள் செய்கின்ற குற்றங்களையெல்லாம் கண்டித்து அடக்குகின்றான்.
அதுமட்டுமா? குழந்தைகளுக்கு அவன் ஆசிரியராக விளங்குகிறான். வளர்ப்புத்தாய் போல் அவர்களுக்கு
அனைத்துப் பணிகளையும் தயங்காமல் செய்கின்றான். வைத்தியரைப் போல ஏதாவது உடல்நலக் குறைவு
என்றால் அதற்கேற்ற மருந்து கொடுத்து மருத்துவனாகவும் இருக்கின்றான். எல்லோருடனும் சகஜமாக
நடந்து கொள்கிறான். ஒரு வேலையிலும் குறை வைக்காமல் வீட்டுக்கு வேண்டிய சாமான்களையெல்லாம்
வாங்கி தயாராக வைத்து விடுகிறான். பால், மோர் இவற்றை வாங்கி வைக்கிறான். வீட்டுப் பெண்களுக்குத்
தாயைப் போல பிரியமோடு பரிந்து ஆதரித்து நடந்து கொள்கிறான். ஒரு நல்ல நண்பனைப் போலவும்,
ஒரு மதியூகி அமைச்சன் போலவும், நல்ல ஆசிரியர் போலவும், தெய்வப் பண்புகளோடும், பார்ப்பதற்கு
மட்டும் ஒரு வேலைக்காரனாகவும் நடந்து கொள்ளும் இவன் எங்கிருந்தோ வந்து சேர்ந்தானே!
இடைச்சாதி என்றல்லவா சொன்னான்! இங்கு இப்படிப்பட்ட தூயவனை நான் வேலைக்காரனாகப் பெற
என்ன தவம் செய்து விட்டேன். கண்ணன் என் அகத்தில் கால் வைத்த நாள் முதலாக எண்ணம், விசாரம்
(கவலை) எதுவும் அவன் பொறுப்பு என்று விட்டுவிட்டேன். அவன் காலடி எடுத்து என் இல்லத்தில்
வைத்த நாள் முதலாய் செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி, கல்வி, அறிவு,
கவிதை, சிவயோகம், தெளிவே வடிவாம் சிவஞானம், எப்போதும் சிறந்து விளங்கும் நலன்கள் அனைத்தும்
ஓங்கி வளர்கின்றன. கண்ணனை நான் ஆட்கொண்டேன்! கண்ணனைக் கொண்டதால் கண் கொண்டேன். கண்
கொண்டேன். கண்ணன் என்னை வந்தடைந்து ஆட்கொள்ள காரணமும் இருக்கின்றனவே!
2.
பாரதிதாசன் - தமிழ்ப் பேறு
முன்னுரை:
புரட்சிக்கவி
பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் பிறந்தவர். பாரதி மீதுகொண்ட பற்றினால் தன்னுடைய இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதை பாரதிதாசன்
என்று மாற்றிக்கொண்டவர். தமிழாசிரியராக
பணியாற்றியவர். தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும்
பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு
திங்கள் இதழை நடத்தி வந்தார். திராவிடச் சிந்தனையாளர், தமிழ் மொழிமீது பற்றுடைய இவர் பெரியார், அண்ணா ஆகியோரால் கவனிக்கப்பட்டவர். இங்கே அவருடைய தமிழ்ப் பேறு
கவிதையின் சிறப்பை அறியலாம்.
கவிதை
ஒன்றை எழுத ஏட்டினை எடுத்தேன். ஏன் என்னைப் பற்றி எழுதக்கூடாதா என்றது வானம்.
அதற்குள் நீர் ஓடையும் தாமரைப் பூக்களும் தங்கள் தங்களின் அழகை ஓவியமாக ஏட்டில்
தீட்டுக என்று உரைத்து நின்றது கற்பனையில். அதனை ஓவியம் தீட்டுவதற்குள் காடும்
வயல்வெளிகளும் மழை மேகமும் வந்து என் கண்ணைக் கவர்ந்து அதைப் பற்றி கவிதை எழுதத் தூண்டியது. தோகை விரித்து ஆடுகின்ற மயில் போன்ற இளம் பெண்களெல்லாம் தத்தம் மனதில் இருக்கும்
உயிர் அன்பினைச் சித்திரமாக செய்யுங்கள் என்றனர்.
அதற்குள்
அழகிய சோலையில் இருந்து வந்த குளிர்ந்த தென்றல் காற்றும்,
பசுமையான தோகை உடைய மயிலும், அன்னப் பறவைகளும், மாலை நேரத்தில்
மேற்கு திசையில் மறைய எத்தனிக்கும் மாணிக்க நிற சூரியன் காட்சியும் கண்முன்னே வருகின்றது. ஏன் வேலைச் சுமந்து இயன்றவரை கொடிநாட்டிய வீரர்களின் தோள் உயர்ந்த எங்கள் பொதியமலை
என்று சொல்லி கவிதை தீட்டலாமா? என்றும் தோன்றியது. இப்படி பல்வேறு கற்பனைகள் என்னைச் சூழ்ந்துகொண்டன மலைமலையாய்.
இவற்றிடையே,
இன்னலில் எம் தமிழ் நாட்டில் உள்ள என் தமிழ் மக்கள் தம் மொழியைக் காக்க முடியாமலும்
கட்டாய மொழித் திணிப்புக்கு உள்ளாகியும் துயின்றிருந்தார். அத்தகையதோர் காட்சி என்னுள் இரக்கத்தை உண்டாக்கி
என் ஆவியில் வந்து கலந்தது. கவிதை எழுத நினைத்த என் சிந்தனை
தமிழ் மக்களின் துயரத்திற்கு முடிவுகாண நினைத்தது. அப்படி நினைக்கையில் 'இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்’ என்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் சத்தமிட்டு சொல்லும் நிலை வரவேண்டும். அப்படி வந்துவிட்டால், துன்பங்கள் நீங்கும்,
இன்ப வாழ்வு வரும், மனத் தூய்மை உண்டாகும்,
வீரம் வரும் என்கிற முடிவுக்கு வந்தது.
முடிவுரை :
இந்தி திணிப்பு
போராட்டத்திற்கு எதிராகப் பாரதிதாசனின் முடிவைக் காட்டுவதாகத் ‘தமிழ்ப் பேறு’ கவிதை அமைந்துள்ளது. தமிழ் மொழி, அது வழங்கிய இடம், அவற்றின் வளம், தமிழர்களது பண்பாடு என எல்லாம் சிறந்தோங்கி நிற்கும்போது ஏன் மற்ற மொழியைக் கற்கவேண்டும், எல்லோரும் தமிழ் படிக்கலாமே என்று சொல்கிறார் பாரதிதாசன்.