இரண்டாம் பருவம் - 2016
1. குறுந்தொகை
-- செவிலித்தாய் கூற்று
(தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று வந்த செவிலி
நற்றாயினிடத்தில், “தலைவி தலைவன் உவக்கும்படி அட்டு
உண்பிக்கின்றாள்” என்று கூறியது.)
முளிதயிர்
பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு
கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை
யுண்கண் குய்ப்புகை கமழத்
தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக்
கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன்
முகனே.
விளக்கம்:
முற்றிய
தயிரைப் பிசைந்த காந்தள் மலரைப் போன்ற மெல்லியவிரலை துடைத்துக் கொண்ட ஆடையைத் துவையாமல்
உடுத்துக் கொண்டு,
குவளை மலரைப் போன்ற மையுண்ட கண்களில் தாளிப்பினது புகை மணப்ப, தானே துழாவிச் சமைத்த இனிய புளிப்பையுடைய குழம்பை, தன்
தலைவன் இனிதென்று உண்பதனால் தலைவியின் முகமானது நுண்ணிதாக மகிழ்ந்தது.
2. ஐங்குறுநூறு - ஓரம்போகியார்,
மருதத்
திணை –
தலைவி தோழியிடம் சொன்னது
மனை
நடு வயலை வேழம் சுற்றும்
துறை
கேழ் ஊரன் கொடுமை நாணி
நல்லன்
என்றும் யாமே
அல்லன்
என்னும் என் தட மென் தோளே.
விளக்கம்:
மனையிலே நடப்பெற்று
வளர்ந்து வரும் வயலைக்கொடியானது கொடிவீசிப் படர்ந்து சென்று புறத்தே உள்ள வேழத்தினைச்
சுற்றி படர்கின்ற துறையுடைய ஊருக்குரியவன்
தலைவன்.
அவன் செய்த கொடுமையானது அயலாருக்கும் புலனாகி அலராவதற்கு நாணி
, அவன் எமக்கு நல்லன் என்றே யாம் வாயாற் கூறுவோம். அப்படி கூறினாலும் எம் பெரிய மென்தோள்கள் தம் மெலிவாலே அவன் நல்லவன் அல்லன்
என்ற உண்மையை பிறரும் நன்றாக அறியுமாறு புலப்படுத்தி விடுமே.
அவன் எனக்கு செய்து வரும்
கொடுமையை மறைப்பினும் , எம் தோள்கள் தம் மெலிவாலே பிறர் அறியுமாறு
வெளிப்படுத்துகிறது.
3. கலித்தொகை: குறிஞ்சித்திணை-
பாடியவர்- கபிலன்
தலைவி
கூற்று
சுடர்த்தொடீஇ!
கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணற்
சிற்றில் காலின் சிதையா,…..
தலைவனின் சிறுவயதுச்
செயல்கள்:
ஒளியுடைய
வளையலை அணிந்த தோழியே! நான் சொல்வதைக் கேட்பாயாக! தெருவில் நாம் மணலால் செய்த
சிறிய வீட்டைத் தன் காலால் கலைத்தும், நாம் கூந்தலில்
சூடிய மலர் மாலையை அறுத்தும்,வரியை உடைய பந்தை எடுத்துக்
கொண்டு ஓடியும் நாம் வருந்தத் தக்க செயல்களைச் செய்யும் சிறியவனாகக்
கட்டுக்கடங்காதவன்,
வீடு – தலைவன் – தலைவி – தாய்:
முன் ஒரு
நாளில் தாயும்,
நானும் வீட்டில் இருந்தபோது வந்தான். "வீட்டில் இருப்பவரே!
உண்ணும் நீரை உண்ண விரும்பினேன்" என்றான். அவ்வாறு வந்தவனுக்கு, என் தாய்," விளங்கும் அணியை அணிந்தவளே! உண்ணீரைப்
பொன்னால் ஆன கலத்தில் எடுத்துக் கொண்டு போய் அவனை உண்ணச் செய்துவிட்டு வா!"
என்றனள். அங்ஙனம் அவள் சொன்னதால் வந்தவன் சிறு பட்டியாய் இருக்கும் தன்மையை
அறியாமல் போனேன்.
சென்ற போது
அவன் என் வளையல் அணிந்த முன் கையைப் பிடித்து வருந்தினான். அதனால் நான் வருந்தி,"தாயே! இவன் செய்த ஒரு செயலைக் காண்பாய்!" என்று உரைத்தேன். தாயும்
அலறிக் கொண்டு ஓடி வந்தாள். அவன் செய்த செயலை மறைத்து யான்,"இவன் நீர் குடிக்கும்போது விக்கல் எடுக்க அதனால் வருந்தினான்' என்றேன். நான் உரைத்ததைக் கேட்டுத் தாயும் அவனது முதுகைப் பல முறைத்தடவினாள்.
அப்போது
அக்கள்வன் மகன் தன் கடைக் கண்ணால் என்னைக் கொல்பவன் போல் பார்த்துத் தன் மகிழ்ச்சி
தரும் புன்முறுவலால் என் உள்ளத்தில் புகுந்தான்.
4. அகநானூறு:
பாடியவர் : மாமூலனார்
திணை : பாலை [பிரிவு]
துறை : மகட்போக்கிய தாய் சொல்லியது
[ களவொழுக்கத்தில் இடையூறு ஏற்பட்ட வழி தலைவி தம் உறவினர் அறியாமல்
தலைவனுடன் கூடி இரவில் உடன்போக்கு சென்றுவிட்டாள். அதை அறிந்த
நற்றாய் வருந்திக்கூறியது].
பாடலின் பொருள் :
தலைவனுடன் தலைவி வீட்டைவிட்டுச்
செல்லல்
Ø தோழியரும் அன்னையான
நானும் வருந்தும்படி தலைவி எங்களை விட்டுப் பிரிந்துபோனாள்.
Ø முகபடாத்தை உடைய
யானையும் பளபளக்கும்
அணிகலன்களையும் உடைய
நன்னன் என்ற
குறுநில மன்னனின்
தலைநகரம் பாழி.
அந்நகரம் அதிக காவலையுடையது.
அதுபோன்று மிகுந்த
காவலையுடைய நம்முடைய பெரிய வீட்டிலிருந்து தலைவனுடன் புறப்பட்டு தலைவி போய் விட்டாள்.
Ø மலை மூங்கிலைப்
போல திரண்ட
மென்மையான தோளையுடைய
என் மகள்,
தன் இனிய
துணைவனை நினைத்த
எண்ணத்தால் அவள் அவனுடன்
சென்றாள்.
அவர்கள் செல்லும் வழியின் தன்மை
Ø இவ்வாறு அவள்
சென்ற நெறி, கடந்து
போவதற்கு அரிதாக
உள்ள வழியில்
இருக்கும் இலுப்பை
மரத்தின் புதிய
பூக்களைத் தின்ற
வாயோடும், நிலத்தில் தூசி
பறக்கச் சென்றும்,
கொன்றை மரக் கிளை களில்
உள்ள குழலைப்
போன்ற காய்களைத் தின்றும் வலிய கைகளை யுடைய
கரடிகளின் கூட்டம் செல்லும்
வழியிலே தலைவி
தலைவனுடன் எங்களைவிட்டுப் பிரிந்துபோகின்றாள்.
அவர்கள் சென்றடைய வேண்டிய இடமும் எனது ஆசையும்
Ø என் மகள்
தன் தலைவனுடன்
சென்ற நெறி,
நுனியிலிருந்து பழுத்த
பாகற்பழத்தைத் தின்னும்
(குருமி விளைந்த
பாகல்) பறை போன்ற வட்டமான
கண்களையுடைய, தோகைகளையுடைய
மயில்கள் மிக்க
சோலைகளையுடைய தலைமைப்
பண்புடைய துளு நாட்டவரின்
(கோசர்கள்) துளு நாட்டைப் போன்று,
Ø பொருளில்லாதவராய் வரும்
புதியவர்களை, உபசரிக்கும்
நல்ல பண்பு டைய
நெருங்கிய சேரிகளைக்
கொண்ட தலைமையுடைய
பழைய ஊர் களில்
முகமறிந்த மக்களை
உடையதாகுக. (சான்றோர்)
என்று நற்றாய்
கூறுகின்றாள்.
[ நான் புலம்ப, அன்பின் மிகுதியாய் அவள் சென்ற வழி அறமறிந்த மக்களை உடையதாக இருக்க வேண்டும்
என் நற்றாய் கூறுகின்றாள்]
5. புறநானூறு:
பாடியவர் – புல்லாற்றூர் எயிற்றியனார்
பாடப்பட்டோன் – கோப்பெருஞ்சோழன்
திணை – வஞ்சி
துறை – துணைவஞ்சி
“மண்டு அமர் அட்ட மதனுடை நோன் தாள்,
வெண்குடை விளக்கும், விறல் கெழு வேந்தே!....”
மூண்டு எழுந்த
போரில் பகைவரைக் கொன்ற வலிய முயற்சியுடைய வெண்கொற்றக் குடையால் உலகத்தை நிழல் செய்து
புகழால் விளங்கும் வெற்றியுடைய மன்னா!
பொங்குகின்ற
நீரையுடைய கடலால் சூழப்பட்ட இந்தப் பரந்த இடத்தையுடைய உலகத்தில் உன்னுடன் போர் செய்ய
வந்த இருவரையும் எண்ணிப் பார்த்தால் , பழமையாய்ப் பொருந்தி
வருகின்ற வன்மையுடைய நின் பகைமன்னரான சேர பாண்டிய மன்னர் அல்லர்.
போரில் விரும்பிய
காட்சியுடன் நின்னுடன் பகையாய் மாறுபட்டு எழுந்த காட்சியுடன் நின்னுடன் பகையாய் மாறுபட்டு
எழுந்த அவ்விருவரும்
, எண்ணிப் பார்க்கும் போது, நீயும் அவர்க்கு அத்தகைய
பகைவனும் அல்லை!
பகையைக் கொல்லும்
யானையையுடைய தலைவனே!
நீ பரந்த நல்ல புகழை இவ்வுலகத்தில் அடைந்து தேவர் உலகத்தில் சென்றால்,
பின்பு நின்னால் கைவிடப்பட்ட அரசாட்சி உரிமை நின்னுடன் போரிட வந்த அவர்க்கே
உரியது.
இன்னும் கேட்பாயாக! புகழை விரும்புவனே! நிலையான் வன்மையுடன் நின்னைக் குறித்துப்
போர் செய்ய வந்த சூழ்ச்சியில்லாத அறிவையுடைய நின் மைந்தர் உனக்குத் தோற்றுப் போனால்,
நின் அரசுரிமைச் செல்வத்தை அவர்க்கே அல்லாது யாருக்குத் தருவாய்?
போரை விரும்பிய
செல்வ!
நீ அவர்க்குத் தோற்றுப் போனால், உன்னை இகழும் பகைவர்
மகிழ்ச்சியடைய உலகத்தில் பழியை அடைவாய்!
ஆகவே, நின்னுடைய மறச்செயலை ஒழிப்பாயாக! அஞ்சியவர்க்கு நின்
அடிநிழல் புகலிடமாகும்! விண்ணவரின் பெறுவதற்கரிய உலகத்தில் உள்ளவர்
நின்னை விரைந்த விருப்பத்துடன் விரைவாக ஏற்றுக் கொள்வதற்கு நல்வினையை மயங்காமல் செய்ய
வேண்டும். ஆதலால் அதற்கு விரைவாக எழுவாயாக! நின்னுள்ளம் வாழ்க!.
6.சிறுபாணாற்றுப்படை
பாண்டிய நாட்டின் பெருமை
தேனைச்
சொரியும் பூக்களையும்,
மென்மையும் பக்குவமுமான தன்மையையும் பெற்றுள்ள நுணா மரத்திலிருந்து
வெட்டப்பட்ட சிறிய மரத் துண்டுகளில், கூரிய இரும்பு
உளிகொண்டு, திருத்தமுறச் செதுக்கிச் செய்திருக்கின்ற அணிகலனை
அணிந்த மார்பினை உடையவர், உமணர் (உப்பு வணிகர்). அவர் வயலில்
விளைந்த பூவினால் கோர்க்கப்பட்ட கண்ணி எனும் மாலையினை காதுவரை அணிந்தவர். இத்தகு
உப்பு வணிகரின் பெரிய எருதுகளைப் பூட்டி இழுக்கின்ற வண்டியோடு வந்த, முதுகுப் பகுதியை மறைக்கும், கோதி ஒழுங்கு
செய்யப்பட்டு, ஐந்து பிரிவாக அமைந்துள்ள கூந்தலையும்
துன்புறும் இடையினையும் உடையவள் உப்பு வாணிச்சி (உப்பு வணிகரின் துணைவி).
அவளின் அணிகலன்கள் அணிந்துள்ள புதல்வரொடு,
உப்பு வாணிகரின் மகளைப் போன்ற குரங்கு, பெண்களின்
பற்களைப் போன்றிருக்கும் கடலில் கிடைக்கும் முத்துக்களை, வாள்போலும்
வாயினை உடைய கிளிஞ்சலின் வயிற்றில் வைத்துமூடி, கிலுகிலுப்பை
விளையாடும்.
அலைகடலை
எல்லையாகக் கொண்ட கொற்கை நகருக்கு அரசனாகிய பாண்டியன், தெற்கிலுள்ள பாண்டிய நாடு முழுமையும் பாதுகாப்பவன். பாண்டியர்கள் மரபில்
வந்தவன். பகைவரை வென்று அவர் நாட்டைத் தனதாக்கி முத்துமாலை சூட்டப்பெற்ற
வெண்கொற்றக் குடையும், கண்ணுக்கினிய வேப்பம்பூ மாலையும்
அணிந்தவன். விரைந்து செல்லும் தேர்ப்படையினை உடையவன். அப்பாண்டிய மன்னனின்,
தமிழ்மொழி நிலைபெற்ற பெருமையினையும், மகிழ்ச்சியான
தெருக்களையும் உடைய மதுரையில் நீ பெறுகின்ற பரிசிலும் குறைவானதாகவே இருக்கும்.
மதுரைக் காஞ்சி
மனம்
கலந்தவர்கள் அனைவரும் மகிழும்படி பொருள் பல கொடுத்து, எதிர்த்துப் போர் செய்பவர்களின் வீரம் கெடுமாறு செய்து, வாளை சுழற்றிப் போரிடும் வீரர்களை வாழ்த்தியும், அவ்வீரர்களை
புகழ்ந்து பாடக்கூடிய பாணர்கள் காலைப்பொழுதே அவர்களைப் புகழ்ந்து பாடுவர்.
அவர்களுக்கு தேரொடு குதிரையும் சேர்த்துக் கொடுத்து, வாகைப்
பூவைச் சூடியும், உதிரக்கூடிய சந்தனத்தை புசிக்கொண்டு
இருக்கும் படைத்தலைவர்களைச் சுற்றமாகக் கொண்டவன். பசுமையான கலத்தில் பலகள்ளினை
உண்டு மகிழ்ந்தனர்.
பணிந்த
நாட்டினைத் தம் நாட்டின் வழி நடக்கசெய்தும், பணியாத நாட்டின்
மீது போர்த்தொடுத்து அவர்களை அடக்கி அவர்களிடமிருந்து கப்பம் பெறுகின்றனர்.
பருந்து பறக்க இயலாத அளவிற்கு அரண்களை அமைக்கின்ரான். படுகண் முரசு காலையில்
ஒலிக்க, எந்த நிலம் வேண்டுமோ அந்நிலத்தின் மீது போர்
தொடுத்து வெற்றிபெறும் ஆற்றல் வாய்ந்த வேல் கொண்ட மன்னர் பலநூறு பேர் உள்ளனர்.
இம்மன்னர்களின்
எண்ணிக்கை கரையில் வந்து குவியும் மணலினும் பலராவர். அவர்கள் யார் என்றால்
தம்புகழ் பரவுமாறு அகன்ற உலகத்தை ஆண்டு மக்களுக்குரிய மன உணர்வு இல்லாமையால்
பிறப்பை போக்கமுயலாமல் பயன் ஏதுமின்றி இறந்தவராவர்.
நீதிநூல்கள்:
திருக்குறள்
நட்பாராய்தல்
1. நாடாது நட்டலின் கேடுஇல்லை: நட்டபின்
வீடுஇல்லை
நட்பாள் பவர்க்கு.
நட்புச்
செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை; ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வதைப் போல் கெடுதியானது வேறு இல்லை.
2. ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம்
துயரம் தரும்.
ஆராய்ந்து
ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான்
சாவதற்குக் காரணமான துயரத்தை உண்டாக்கிவிடும்.
3. குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும்
அறிந்தியாக்க நட்பு.
ஒருவனுடைய
குணத்தையும்,
குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ளவேண்டும்.
4. குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும்
கொளல்வேண்டும் நட்பு.
உயர்ந்த
குடியில் பிறந்து,
தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது
நட்புக் கொள்ளவேண்டும்,.
5. அழச்சொல்லி அல்லது இடித்து வழக்குஅறிய
வல்லார்நட்பு
ஆய்ந்து கொளல்.
நன்மையில்லாத
செயலைக் கண்டபோது வருந்தும் படியாக இடித்துச் சொல்லி, உலக நடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ந்து கொள்ளவேண்டும்.
6. கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை
நீட்டி
அளப்பதோர் கோல்.
கேடு
வந்தபோதும் ஒருவகை நன்மை உண்டு; அக்கேடு ஒருவனுடைய நண்பரின்
இயல்புகளை நீட்டி அளந்து பார்ப்பதொரு கோலாகும்.
7. ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை
ஒரீஇ விடல்.
ஒருவனுக்கு
ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவருடன் செய்துகொண்ட
நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்,
8. உள்ளற்க உள்ளம் சிறுகுவ: கொள்ளற்க
அல்லல்கண்
ஆற்றுஅறுப்பார் நட்பு.
ஊக்கம்
குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்கவேண்டும்; அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க
வேண்டும்.
9. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும்
உள்ளம் சுடும்.
கேடு வரும்
காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும்
காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.
10. மருவுக மாசற்றார் கேண்மை:ஒன்று ஈத்தும்
ஒருவுக
ஒப்பிலார் நட்பு.
குற்றமற்றவருடைய
நட்பைக் கொள்ளவேண்டும்;
ஒத்த பண்பு இல்லாதவருடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிடவேண்டும்.
திருக்குறள் - புலவி நுணுக்கம்
பெண்ணியலார்
எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன்
பரத்தநின் மார்பு.
பெண்
விரும்பியே! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக்
கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.
நீடுவாழ்
கென்பாக் கறிந்து.
ஊடல்
கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை ‘நீடுவாழ்க’ என வாழ்த்துவேன் என்று நினைத்து.
காட்டிய
சூடினீர் என்று.
கிளைகளில்
மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ
ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.
யாரினும்
காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும்
யாரினும் என்று.
யாரைக்
காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன் என்று இயல்பாகச்
சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும்
எனக் கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்.
கண்நிறை
நீர்கொண் டனள்.
இப்பிறப்பில்
யாம் பிரியமாட்டோம் என்று நான் சொன்னவுடன் அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று
உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா? எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி.
உள்ளினேன்
என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள்
புலத்தக் கனள்.
உன்னை
நினைத்தேன் என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்; அப்படியானால்
நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்? எனக்கேட்டு ஏன் மறந்தீர்? என்று அவள் ஊடல்
கொண்டாள்.
வழுத்தினாள்
தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித்
தும்மினீர் என்று.
யான்
தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை
விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு
அழுதாள்?.
எம்மை
மறைத்திரோ என்று.
ஊடல்
கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் ஓ உமக்கு
நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ? எனக் கேட்டு அழுதாள்.
தன்னை
உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர்
ஆகுதிர் என்று.
நான் பணிந்து
போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள் ஓ!
நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ? என்று
சினந்தெழுவாள்.
நினைத்திருந்து
நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி
நோக்கினீர் என்று.
அவளுடைய
அழகை நினைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை
நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று
சினம் கொள்வாள்.
நாலடியார் – மேன்மக்கள்
1. 1. அழகிய இடத்தினையுடைய வானத்தில்
விரிந்த நிலவினைப் பரப்பும் சந்திரனும் மேன்மக்களும்
பெரும்பாலும் தம்முள் ஒப்பாவார். ஆனால், திங்கள் தன்னிடமுள்ள களங்கத்தைப் பொறுத்துக்கொள்ளும்; மேன்மக்களோ அதனைப் பொறார். அவர்கள் தமது ஒழுக்கத்தில் ஒரு சிறிது தவறு
நேர்ந்தாலும் வருந்தி மெலிவர்.
2. கரும்பைப் பல்லால் கடித்தும், கணுக்கள் நொய்யுமாறு
ஆலையிலிட்டுச் சிதைத்தும், உரலில் இட்டு இடித்து
அதன் சாற்றைக் கொண்டாலும், அச்சாறு, இனிய சுவையுள்ளதாகவே இருக்கும். அதுபோல, மேன்
மக்களின் மனம் புண்ணாகுமாறு பிறர் எவ்வளவு தான் இகழ்ந்துரைத்தாலும் அம் மேன்மக்கள்
தம் வாயால் தீயன சொல்லார்.
3.
குற்றமற்ற அறிவுடைய மேலோர் திருடார்; கள் அருந்தார்; விலக்கத்தக்க தீயனவற்றை விலக்கித் தூயராகி விளங்குவர்; பிறரை அவமதித்து இகழ்ந்து உரையார்; மறந்தும்
தம் வாயால் பொய் கூறார். ஊழ் வினையால் வறுமையுற்றாலும் அதற்காக வருந்தவும்
மாட்டார்.
4.
நற்பண்பு இல்லாத கீழ் மக்கள் தம்மிடம், ஒருவர் பல
நாட்கள் வந்து கொண்டிருந்தால், (இவர் எதையோ விரும்பி
இங்கு வருகிறார்) என்று கருதி அவரை அவமதிப்பர். ஆனால் நற்குணம் நிறைந்த மேன்
மக்களோ தம்மிடம் வருபவர் எதையாவது விரும்பினாலும் 'நல்லது' என்று கூறி மகிழ்ந்து நாள் தோறும் அவர்க்கு நன்மையே செய்வர்.
5.
‘இவர் செல்வம் உடையவர்' என்று மதித்து, கீழ் மக்கள் பின்சென்று அவர் தருவன பெற்று வயிறு வளர்ப்பர்
பெரும்பாலோர், அவர்களுக்கு நற்குணம் மிக்க
மேன்மக்களின் தொடர்பு கிடைக்குமானால் பொருள் நிறைந்த ஒரு சுரங்கமே கிடைத்தது போல்
இருக்குமல்லவா?.
பக்தி
இலக்கியம்
சைவம் – பன்னிரு திருமுறைகள்
1. திருஞானசம்பந்தர் தேவாரம் – நமச்சிவாயத் திருப்பதிகம்
காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி…
உள்ளன்பு
கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய
நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும், நான்கு
வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும், அனைவருக்கும்
தலைவனான சிவபெருமானின் திருநாமம் ‘நமச்சிவாய’ என்ற திருவைந்தெழுத்தாகும்.
2. திருநாவுக்கரசர்
தேவாரம்
- ஐந்தாம் திருமுறை
மாசில் வீணையும்
மாலை மதியமும்…
இறைவனாகிய
எந்தையின் திருவடி நீழல் குற்றமற்ற வீணையின் நாதமும் ,
மாலையிலே தோன்றிய நிலவின் தண்மையும் , வீசுகின்ற
தென்றலின் சாயலும் , செறிந்த இளவேனிலின் மாட்சியும் ,
ஒலிக்கும் வண்டுகள் மொய்க்கும் பொய்கையின் குளிர்ச்சியும் போன்று
இன்பம் பயப்பதாகும் .
3. சுந்தரர் தேவாரம் – ஏழாம் திருமுறை
பொன்னார் மேனியனே புலித்தோலை
அரைக்கசைத்து…
பொன்போலும் திருமேனியை உடையவனே , அரையின்கண் புலித்தோலை உடுத்து ,
மின்னல்போலும் சடையின் கண் , விளங்குகின்ற
கொன்றை மாலையை அணிந்தவனே , தலைவனே , விலையுயர்ந்த
இரத்தினம் போல்பவனே , திருமழபாடியுள் திகழும் மாணிக்கம்
போல்பவனே , எனக்குத் தாய்போல்பவனே , இப்பொழுது
உன்னையன்றி யான் வேறு யாரை நினைப்பேன் ?
4. மாணிக்கவாசகர் – திருவாசகம் – பிடித்த பத்து
பால்நினைந்து ஊட்டும்
தாயினும் சாலப்…
உலகில்
நம்மிடம் அன்பு செலுத்தி நலம் புரிபவர்களில் தாயை விட மேலானவர் எவரும் இலர்.
அவள் தான் நமக்குப் பால் நினைந்து ஊட்டி நம்மைப் பாதுகாத்து வளர்க்கின்றாள்.
அத்தகைய தாயினும் மேலாக நம்மிடம் சாலவும் பரிவுகாட்டித் தன்னருள் புரிபவன்
இறைவன் அவன் ஊனினை உருக்கின்றான். உள்ளொளியாகிய குணத்தைப் பெருக்குகின்றான்.
அளவில்லாத ஆனந்தம் என்னும் தேனினைச் சொரிகின்றான். நான் செல்லுமிடமெல்லாம் நம்முடன் கூடவே புறம் புறம் வந்து திரிகின்றான்.
அவனை நான் சிக்கெனப் பிடித்துக் கொண்டேன். என்னை
விட்டு அவன் இனி எங்கே போக முடியும்.
5. திருமூலர் – திருமந்திரம்
மரத்தை மறைத்தது
மாமத யானை…
மரத்தால் செய்யப்பட்ட பெரிய மதயானை உருவம்
சிற்பியின் கைவண்ணத்தால் மரத்தை உணர ஒட்டாமல் மறைத்து, மக்களை மயக்குகின்றது. ஆயினும்
சிற்பியினது வேலைப் பாடுகளை அழித்து விட்டால், அந்த மத
யானையாய் இருந்த பொருள் அழியாதிருப்பினும் மரத்தினுள்ளே மறைந்துவிடும். அது போல,
பரம்பொருளால் இயங்குகின்ற உலகம், ஆன்மாவின்
பெத்த காலத்தில் தானே சுதந்திரமாய் இயங்குவனவாய் அதற்குக் காட்சியளிக்கும்.
ஆயினும் குருவருளால் ஞானத்தைப் பெற்ற முத்தி காலத்தில் உண்மை ஞானம் பொது ஞானத்தை
அழித்துவிடுவதால், உலகம் சுதந்திரம் அற்றொழியப் பெரும்
பொருளின் இயக்குதலே விளங்கி நிற்கும்.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
பூதத்தாழ்வார்
மேகம் போன்ற நிறத்தினை உடைய திருமால்
குடிகொண்டுள்ள திருவேங்கட மலையில், பெருகுகின்ற மதநீர் கொண்ட ஆண் யானை
தன்னுடைய பெண் யானைக்கு முன்பாகநின்று கொண்டு இரு கணுக்கள் மட்டுமே வளர்ந்துள்ள இளம் மூங்கிலை
ஒடித்து அருகில் இருந்த தேனோடு கலந்து உண்ணக்கொடுக்கும். திருவேங்கடமலையினைக்
காண்பீராக.
குலசேகராழ்வார்
அழியாத
இளமையாகிய செல்வத்தையுடைய அரம்பை முதலான தேவமாதர்கள் சூழ்ந்து நிற்க சுவர்க்கத்தை ஆளுகையாகிய
செல்வத்தையும் (இந்திரப்பதவி) பூலோகத்தை ஆளுகையையும் நான் விரும்பவில்லை. தேன் மிகுந்துள்ள
மலர்களை உடைய சோலை சூழ்ந்த திருவேங்கட மலையில் உள்ள நீர் சுனைகளிலே மீனாகவாவது பிறக்கத்தக்க
விதிஉடையவனாக இருக்க விரும்புகின்றேன்.
பெரியாழ்வார்
சுவாமி, திருமாலுக்கு நாங்கள் அடிமைப் பட்டவர்கள் என்று ஏற்பட்ட நாள் முதலாகவே எங்களுடைய
சந்ததிகள் நல்ல கதியை
அடைந்து கடைத்தேறியது . நன்னாளில் அவதரித்து அழகிய வடமதுரையில்
கம்சனுடைய ஆயுத சாலையில் புகுந்து அவனுடைய வில்லை ஒடித்து முறித்தவனும் காளிங்கன் என்னும்
நாகத்தின் ஐந்தலையின் மேல் குதித்தவனுமாகிய பெருமாளே நீ பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்து
கூறுகின்றோம்.
ஆண்டாள்
திருவிக்கிரமனாக வளர்ந்து
மூன்று உலகங்களையும் திருவடிகளால் அளந்த இறைவனுடைய திருநாமங்களைப் பக்தியுடன் பாடி
நாங்கள் பாவை நோன்பிற்காக நீராடினால் நாட்டில் எவ்விதத் தீங்கும் ஏற்படாது.
மாதம் தோறும் மூன்று முறை மழை பெய்யும் . மழை பெய்ததால்
செந்நெல் பயிரின் ஊடே மீன்கள் பெரிதாகப் பருத்து துள்ளும். புள்ளிகளை
உடைய வண்டுகள் மலர்ந்திருக்கின்ற நெய்தல் பூவிலே தேன் குடித்து விட்டு உறங்கும்.
உதார குணமுடைய பசுக்கள் குடம் குடமாய் நிறைய பால் கறக்கும். இப்படி அழிவில்லாத செல்வம் நிறைந்திடும்.
திருப்பாணாழ்வார்
நாற் சதுரமாய் உயர்ந்திருக்கின்ற
மதில்களால் சூழப்பெற்ற இலங்கா நகரத்திற்கு நாதனான இராவணனை முதல் நாள் போரில் தோற்றோடும்
படி செய்து மறு நாள் போரில் அவர் தலை பத்தும் பனங்காய் போல் உதிரும் படி ஒப்பற்ற வெங்கணையைத்
தொடுத்தவனும் கடல்நிற வண்ணனும் , வண்டு பாட மயில்கள் ஆட திருவரங்கத்தில்
எழுதருளியுள்ள வனுமாகிய எம்பெருமானுடைய திருவயிற்றில் அணிந்துள்ள உதரபந்தனம் என்னும்
வயிற்றுப் பட்டிகை ஆபரணம் என் நெஞ்சினுள் நிலைத்து நின்று உலாவுகின்றது.
இஸ்லாம்
குணங்குடி
மஸ்தான் சாகிப்
மறந்து நடக்கின்ற மனமே,
ஓடியோடி அலைந்தும் இவ்வுலகம் எல்லாந்திரிந்தும், தேடிவைத்த திரவியம் யாவையும் அங்ஙனம் தேடியவன் இருந்த சரீரம் விழுந்தபிறகு
மறுபடியும் வந்து அச்செல்வத்தை எடுத்துக் கொள்ளும் வழக்கமிருக்கின்றதா? இல்லை ஆகையால் வாடி இறந்து தருமஞ்செய்வாய். அங்ஙனம் செய்வாயானால்
குணங்குடி நாதருடைய அருள் கிடைக்கும்.
பாழ்பட்ட மனமே அங்குமிங்கும்
ஆடுகின்ற கொடிய பொருளாட்சிக்கு அங்குமிங்குமாக அலைந்து பாடுபடுவது உன்னுடைய பாரமாமோ? நீ சொல் – சரீரம்
கெட்டுப் போகின்ற வழியைத்
தேடும் அப்பால் இருக்கின்ற கூட்டத்தை விட்டு வாட்டம் பெறுவதொழி உண்மை குணங்குடி நாதருடைய
அருள் கிடைக்கும்.
எல்லாச் சிருஷ்டிகளையும் சிருஷ்டித்து
இரணங்கள் கொடுப்பவன் அல்லா ஒருவனேயல்லாமல் வேறு ஒருவரில்லை. ஆகையால்
சொல்லாமல் சொல்லுகின்ற வேதத்தின் முடிவில் சொல்லிறந்த வல்லான் எழுந்தருளியிருக்கின்ற
குணங்குடியில் வாழ்ந்திருப்போமாதலின் இனி நீங்கள் வாருங்கள்.
கிறித்துவம்
ஆதிநந்தாவனப்
பிரளயம்-- அ. வேதக்கண்
ஏதேன் தோட்டத்தின் வர்ணனை
கிறித்தவ படைப்பின் வரலாற்றில்
ஏதேன் தோட்டம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இறைவன் தாம் உருவாக்கிய முதல்
மனிதர்களாகிய ஆதாம் ஏவாளை ஏதேன் தோட்டத்தில் வசிக்கச் செய்தார். தோட்டத்தில் உள்ள எல்லாக் கனிகளையும் உண்ணலாம். ஆனால்
தோட்டத்தின் நடுவிலுள்ள நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை மட்டும்
உண்ணக்கூடாது என இறைவன் மனிதர்களாகிய ஆதாம் ஏவாளுக்குக் கட்டளையிட்டார்.
ஏதேன் தோட்டம் கண்ணால் பார்க்க
அழகாகவும் நறுமன வாசனையை வீசிக் கொண்டும் உண்ணருசியாக யிருக்கின்ற காய்களும்
கனிகளும் விதவிதமாய் விளங்கவுமாக பல பல மரங்கள் இயற்கையாகவே வளர்ந்து
செழித்திருந்தன. தேவர்களும் புகழ்கின்ற தோட்டமாக விளங்கியது. இவ்வளதுதான் என்று
யாராலும் சொல்ல முடியாத அழகுடன் வளமாய் செழுமை கொண்டு மரங்கள் அடர்ந்திருந்தன.
மரங்களின் வாசனை பேரின்பத்தைத் தருவதாக ஆதிநந்தாவனமாகிய ஏதேன் தோட்டம் விளங்கியது.
நறுமணம் வீசுகின்ற, பரிமள தைலத்தின்
வாசனை போல் கமகம என்று மணக்கவும், பழங்களும் காய்களும் பூக்களும் மொட்டுகளும்
விரிகின்ற பூக்களுமாக தோட்டத்தில் விதவிதமாக வகை வகையாக பூத்துக் காய்த்து
மணிகளால் அலங்காரம் செய்தது போல பூக்கள் சரம் சரமாய்த் தொங்கவும், எரிகின்ற
விளக்கு போல சோலையில் பூக்கள் அழகாய்த் தெரியவும் மனைவியாகிய ஏவாளுடன் ஆதாம் அந்த
ஏதேன் தோட்டத்திலே மகிழ்ந்திருந்தான்.
அரசனின் அழகான அரண்மனையின் நடுவில்
சிங்காசனம் (மணிமேடை) இருப்பது போல வாசமுடன் திகழ்கின்ற பல நீண்ட நெடிய மரங்கள்
இருக்கின்ற ஏதேன் தோட்டத்தின் நடுவினில் வானம் வரை நீண்டு உயர்ந்த மரம் ஒன்று அந்த
ஏதேன் தோட்டத்திலிருக்கிறது. அம்மரத்தின் கனியை உண்டவர்களுக்கு எப்போதும்
சாவில்லை. அக்கனி ஜீவகனி (ஜீவ விருட்சக் கனி) என்று சொல்லப்படுகிறது.
ஜீவ விருட்ச மரத்தை
அடுத்து ஒரு மரம் தோட்டத்தின் நடுவே இருந்தது. அம்மரத்தின் கனியை உண்டவர்கள்
நன்மை, தீமை என்று பகுத்தறியும் திறன் பெறுவர். அம்மரத்தின் பெயர் நன்மை தீமை
மரமாகும். கவிஞர்கள் நாவினாலும் தேவர்களின் மொழியினாலும் படிக்கவும் எழுதவும்
முடியாத வனமே ஆதிநந்தாவனமாகும். ஏதேன் தோட்டமாகும். சாத்தானான பேய் இந்த ஏதேன்
தோட்டத்தைக் கண்டு மனம் கலங்கி சஞ்சலித்தான்.
.......................................................................................................................