மணிமேகலை
உலக அறவி புக்க காதை
“வித்யாதர உலகம் என்ற ஒளி வீசும் வடதிசைப் பகுதியில் தன் கணவன் விஞ்சையனுடன் காஞ்சனபுரம் என்ற நகரில் வசித்து வந்தவள் காயசண்டிகை. காஞ்சனபுரத்தைச் சேர்ந்தவன் என்பதால் இவள் கணவன் காஞ்சனன் என்றும் அழைக்கப்படுபவன். இருவரும் வான்வழி செல்லும் திறன்பெற்றவர்கள். காயசண்டிகை தன் கணவனுடன் வான் வெளியே கிளம்பித் தென்திசை நோக்கிப் பயணித்தாள். பொதிகை மலையைக் காண வேண்டும் என்பது அவர்களுடைய நெடுநாள் கனவு. ஒரு காட்டாற்றின் கரையில் அவளும் அவள் கணவனும் தங்கியிருந்தனர்.
“அப்போது விருச்சிகன் என்ற பெயருடைய
முனிவர் ஒருவர் அங்கே வந்தார். முப்புரி.நூலை அணிந்த அவர், மரவுரி
தரித்துக் கழுத்துவரை புரளும் சடைமுடிக் கற்றைகள் அசைய வந்தார். அவர்
கையில் ஒரு சிறிய தேக்குமர இலை; அதில் ஒரு நாவல்கனி. அந்த நாவல்கனி மற்ற
நாவல் பழங்களைப்போல் இல்லாமல் ஒளிமிகுந்ததாக கனிந்து விளங்கிய அதைப்
பார்த்ததும் உண்ண வேண்டும் என்ற ஆவல் மிகும் வண்ணம் இருந்தது. முனிவர்
அந்தக் கனியைக் கவனமாக ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு மணம் வீசும்
பூக்கள் நிறைந்த பொய்கையில் இறங்கி நீராடச் சென்றார்.
“காயசண்டிகையின் பொல்லாத நேரம், அக்கனியை
உண்ணவேண்டும் என்ற ஆவலைவிட அதன்மேல் ஒருவித அசூயையே அதிகமானது. பிறருடைய
பொருள்மீது ஆசைகொள்ளக்கூடாது என்ற எண்ணம் அழிந்தது. திமிராக நடந்து சென்று
அந்தக் கனியைத் தன் கால்களால் மிதித்தாள்.
“நீராடி முடித்துவிட்டு கனியை உண்ணலாம் என்ற நினைப்புடன் வந்த விருச்சிகன் காயசண்டிகையால் சிதைக்கப்பட்ட கனியைக் கண்டார்.
“ ‘அடி பாவி! எத்தகைய தன்மையுடைய
நாவல் பழத்தை இப்படிச் சிதைத்துவிட்டாய் என்று உனக்குத் தெரியுமா? சாதாரணப்
பழமில்லை இது. தெய்வத்தன்மை வாய்ந்தது. பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை
கனியும் இந்த அரிய கனியை உண்பவர்களுக்குப் பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பசி
ஏற்படாது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்கனியை உண்டு மற்ற
நேரங்களில் தவம்புரிபவன். அப்படிப்பட்ட கனியை நாசம்செய்து என் தவத்தை நாசம்
செய்துவிட்டாயே, பாவி!’ என்று சீறினார்.
“அதோடுவிட்டாரா? சாபமும் கொடுத்தார்.
“ ‘வானில் பறந்து செல்லும் உன்னுடைய
ஆற்றல் செயலற்றுப் போகட்டும். யானைத்தீ என்று அழைக்கப்படும் கடும்பசி
நோயால் நீ பனிரெண்டு ஆண்டுகள் அவதிப்படு. மீண்டும் பன்னிரெண்டு ஆண்டுகள்
கழித்து நான் இதே போன்ற நாவல் கனியை உண்ணும்போது உன் பசிப்பிணி இளம்பெண்
ஒருத்தியால் தீரட்டும்’ என்று சாபமிட்டார்.