Monday, September 7, 2015

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம்-----மதுரைக் காண்டம்
                                                            வழக்குரை காதை
 
 
[பெருஞ் சீற்றத்துடன் வாயிலை யடைந்த கண்ணகி தன் வரவை வாயில் காப்போனால் அரசனுக்கு அறிவித்துச் சென்று முன்னின்று, அவன் கேட்பத் தன் ஊர், பெயர் முதலியவற்றையும், தன் கணவனை அவன் ஆராயாது கொன்ற கொடுங்கோன்மையையும் அஞ்சாது இடித்துரையால் எடுத்தியம்பி, தன் கணவன் கள்வனல்ல னென்று தெரிவித்தற்பொருட்டுத், தன் சிலம்பினுள் உள்ள பரல் மாணிக்கம் என்றாள் ; அரசன் தன் தேவி சிலம்பின் பரல் முத் தென்று கூறி, கோவலனிடமிருந்து கொண்ட சிலம்பை வருவித்து வைக்க, கண்ணகி அதனை உடைத்தாள் ; உடைக்க, அதிலுள்ள மாணிக்கப் பரல் அரசன்முன் தெறித்தது ; அது கண்ட நெடுஞ் செழியன் நடுநடுங்கி, 'இழிந்த பொற்கொல்லன் சொற் கேட்ட கொடுங்கோன்மையையுடைய யானோ அரசன்! யானே கள்வன் ; தென்புலம் காவல் என் முதற் பிழைத்தது ; இன்றே கெடுக என் ஆயுள்' எனக் கூறித் துயருற்று மயங்கித் தான் அமர்ந்த அரசு கட்டிலில் வீழ்ந்து துஞ்சினான் ; அது கண்ட அரசன் மனைவி கணவனை இழத்தலாகிய கொடுந் துன்பத்தை எண்ணி வருந்தி, அவன் இணையடிகளைத் தொழுது தானும் விழ்ந்தனள்.]
அரசன் வினாவும்--- கண்ணகி விடையும்
தேரா மன்னா செப்புவது உடையேன்…”
உண்மை தெளியா மன்னனே! சொல்லுகிறேன் கேள். தேவர்களும் வியக்கும்படி ஒரு புறாவினது துன்பத்தை நீக்கின சிபி என்னும் செங்கோல் மன்னனும்; தனது அரண்மனை வாயிலில் கட்டப்பட்ட ஆராய்ச்சி மணியை இடைவிடாது அசைத்து ஒலித்த ஒரு பசுவின் துயரைப் போக்க எண்ணி, அப்பசுவின் துன்பத்திற்குக் காரணமான தனது அரும்பெறல் மகனைத் தானே தனது தேர்ச் சக்கரத்திலிட்டுக் கொன்றவனான செங்கோல் வேந்தன் மநுநீதிச் சோழனும் அருளாட்சி செய்த பெரும் புகழை உடைய புகார் நகரம் என்னுடைய ஊராகும்.
புகார் நகரில் மிக்க புகழுடன் விளங்கும் பெருங்குடி வணிகனான மாசாத்துவான் என்னும் வணிகனது மகனாய்ப் பிறந்து, வாணிகம் செய்து வாழ்தலை விரும்பி, ஊழ்வினை காரணமாக உனது பெரிய நகரமாகிய மதுரையிலே புகுந்து, இங்கு அத்தொழிலுக்கு முதலாக என்னுடைய காற்சிலம்புகளுள் ஒன்றினை விற்பதற்கு வந்து, உன்னால் கொலைக்களப்பட்ட கோவலன் என்பான் மனைவி ஆவேன். என்னுடைய பெயர் கண்ணகிஎன்றாள்.
மன்னன் கூற்று
பெண் அணங்கே ! கள்வனைக் கொல்வது செங்கோல் முறைமைக்கு ஏற்றது ஆகும். முறை தவறாத அரச நீதியே ஆகும்,” என்று மன்னன் விளக்கினான்.
 கண்ணகி காட்டும் சான்று
அது கேட்ட கண்ணகி, “நல்ல முறையில் ஆராய்ந்து பார்த்துச் செயல்படாத கொற்கை வேந்தனே! என்காற் பொற்சிலம்பு மாணிக்கக் கற்களை உள்ளிடு பரல்களாக உடையதுஎன்றாள்.
 சான்றினைப் பாராட்டுதல்
அது கேட்ட மன்னன் உண்மையை அறிவதற்குத் தகுந்த சான்று கூறிய கண்ணகியைத் தன்னுள் பெரிதும் பாராட்டி, “நல்லது. நீ கூறியவை நல்ல சொற்கள். எமது சிலம்பு முத்துகளை உள்ளிடு பரல்களாக உடையது.என்றான்.
கண்ணகி சிலம்பை உடைத்தல்
மன்னனது ஆணைப்படி கோவலனிடமிருந்து பெற்ற காற்சிலம்பினை ஏவலர் கொண்டு வந்து தர, அச்சிலம்பினை வாங்கித் தானே அதனைக் கண்ணகியின் முன் பாண்டியன் வைத்தான். உடனே கண்ணகி விரைந்து அச்சிலம்பினைக் கையில் எடுத்து மன்னன் முன்னிலையில் உடைத்தாள். அச்சிலம்பு உடைந்து அதனுள் இருந்த மாணிக்கக் கற்கள் சிதறுண்டு அரசனுடைய முகத்திலும் பட்டுக் கீழே விழுந்தன.
கண்ணகி அணிமணிக் காற்சிலம்பு உடைப்ப
மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே
                           (வழக்குரை காதை : 71-72)
 பாண்டியன் நிலைமை
பாண்டிய மன்னன் அவ்வாறு சிதறிய மாணிக்கப் பரல்களைக் கண்டவுடன் தனது வெண்கொற்றக் குடை ஒருபக்கம் விழவும், பிடிதளர்ந்து தனது செங்கோல் ஒருபக்கம் சாய்ந்து நிற்கவும், “பொற்கொல்லனின் சொல்லைக் கேட்டு அதனை உண்மையென்று துணிந்த அறிவிலியாகிய யானும் ஓர் அரசன் ஆவேனோ? இப்பொழுது யானே கோவலனின் சிலம்பைக் கவர்ந்த கள்வன் ஆகின்றேன். குடிமக்களைப் பேணிக் காத்து வருகின்ற இத்தென்னாட்டின் பாண்டியர் ஆட்சிச் சிறப்பு என்னால் பிழைபட்டு விட்டதே; ஆதலால் என் ஆயுள் அழிவதாகஎன்று கூறி மயங்கி அரசு கட்டிலினின்றும் வீழ்ந்தான்.
பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுகவென் ஆயுள்என
                          (வழக்குரை காதை : 74-77)
இவ்வாறு அரசன் தன் தவற்றை உணர்ந்ததும், தன்னுயிர் நீத்து நீதியை நிலை நிறுத்தினான்.
 கோப்பெருந்தேவியின் நிலை

அரச மாதேவியின் உள்ளமும் உடலும் நடுங்கின. கணவனை இழந்த கற்புடைய மகளிர்க்கு அந்த இழப்பிற்கு ஈடாகக் காட்டுவதற்கு உலகில் யாதொன்றும் இல்லை. ஆதலால் தன் கணவனுடைய திருவடிகளைத் தொழுது வீழ்ந்தனள்; உயிர் துறந்தனள்.

திருக்குற்றாலக் குறவஞ்சி

2.  திருக்குற்றாலக் குறவஞ்சி

முன்னுரை:
திருக்குற்றாலக்குறவஞ்சியின் ஆசிரியர் திருக்கூடராசப்பக் கவிராயர் ஆவர். இந்நூல் குறவஞ்சி நூல்களுள் தனித்தன்மை வாய்ந்த ஒன்று.
நூற்குறிப்பு :- உங்கள் செய்யுள் புத்தகத்தில்….
 பாடல் எண் : 1: மலைவளம் கூறுதல்
                        குறத்தி தலைவியிடம் குறவர்கள் வாழும் திரிகூட மலையாகிய திருக்குற்றால மலையின் வளங்களைக் கூறுகிறாள்.
  வானுயர் தோற்றம்:-
 திரிகூடமலையில் தம் இனத்தோடு கூடிவாழும் ஆண் குரங்குகள் அம்மலையில் விளையும் பலவகையான பழங்களைப் பறித்து வந்து தத்தம் பெண் குரங்குகளுக்கு அன்புடன் கொடுத்து அவற்றோடு கொஞ்சி விளையாடும். அப்பெண்குரங்குகள் சாப்பிட்டு எறிந்த மிச்சில் பழங்களைப் பெற தேவர்களும் ஏங்கி நிற்பர். அம்மலையில் வாழும் வேடவர்கள் தம் பார்வையாலேயே தேவர்களையும் தம்மிடம் வரும்படி அழைப்பர்.
வான் வழியே செல்லும் ஆற்றல் படைத்த சித்தர்கள் அம்மலையில் காய சித்திக்கான மூலிகைகளை விளைவிப்பார்கள்தேனருவி போன்ற அருவியின் அலைகள் கரையைக் கடந்து வான்வழியே தரையில் ஒழுகும்அம்மலை மீதாக வானிற் செல்லும் சூரியனுடய தேர் சக்கரமும் அதில் பூட்டப்பட்ட குதிரைகளின் கால்களும் வழுக்கிச் செல்லும் . கூனல் இளம் பிறையை அணிந்துள்ள சடை முடியை உடைய சிவபெருமான் வீற்றிருக்கக் கூடிய திரிகூட மலை எங்கள் மலை என்று கூறுகிறாள் .
பாடல் எண் : 2 :  குறவர் வாழ்க்கை:-
திரிகூட மலை குறவர்க்குரிய மலையாகும். அம்மலையில் ஒலிக்கும் அலைகளையுடைய அருவிகள், கழங்கு (கல்லாங்காய்) ஆடுவதுபோல் பெரும் முத்துக்களைத் தம் இருபுறங்களிலும் வீசிச் செல்லும். அந்த அலைகள் வீடுகளின் முற்றங்கள் தோறும் ஓடிச்சென்று சிறு பெண்கள் விளையாடுவதற்காக கட்டிய சிறிய வீடுகளைச் சிதைத்துச் செல்லும்.
 அம்மலையில் வாழும் குறவர்கள் கிழங்குகளைத் தோண்டி எடுத்தும், தேனடை களிலிருந்து தேனெடுத்தும், அம்மலையின் வளத்தைப் புகழ்ந்து பாடி ஆடி மகிழ்வர். யானையின் தந்தங்களை ஒடித்து அவற்றையே உலக்கைகளாகக் கொண்டு காய்ந்த தினையை மாவாய் இடிப்பர். அம்மலையில் பெரிய குரங்குகள் சுவைமிகுந்த மாங்கனிகளையே பந்தாகக் கொண்டு விளையாடும்.
ஓங்கி வளர்ந்துள்ள சண்பக மரங்களின் மலர்கள் தேவலருகிலும் சென்று மலர்ந்து மணம் பரப்பும். அடியார்களுக்கு வேண்டுவன வழங்கும்  அருட்கொடையாளர், பேரரசர், குறும் பலா மரத்தடியில் எழுந்தருளியிருப்பர்.
இவ்வளவு வளம்பெருகக் கூடிய மலையாகிய திரிகூட மலை எங்கள் மலையே என்று கூறுகிறாள் .

 1. கலிங்கத்துப்பரணி   -     செயங்கொண்டார்



போர் பாடியது      -           கிபி. 11 ஆம் நூற்றாண்டில் சோழன் குலோத்துங்கன் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து போர் புரிந்ததைச் சிறப்பித்து கூறு பகுதியாக போர் பாடியது என்ற பகுதி அமைந்துள்ளது.

போர்த்தொடக்கம்
            சோழர் படையினரும் கலிங்கர் படையினரும் குதிரைப் படைகளையும் யானைப் படைகளையும் ஏவிப் போர் புரியத் தொடங்கினர். இருதிறப் படையினரும் போர் தொடங்குங்கள் போர்தொடங்குங்கள்! என்று உரத்துக் கூவும் போரின் ஓசையானது கடல் ஒலியையும் வென்றது! பகைவர் மேல் குதிரைப் படையை ஏவுங்கள் ஏவுங்கள்! ஏவுங்கள். யானைப்படைகளை விடுங்கள்! விடுங்கள்! விடுங்கள்! என்று வீரர்கள் உரைக்கும் ஓசையும் மிகுதியால் உண்டாயிற்று.

போரின் பேரொலி
            வீரர்கள் ஆரவாரித்தலாகிய போரில், அவர்களுக்குள்ள ஆவலாலும் ஆண்மையாலும் , யாவரும் அஞ்சும்படி, வில்லிருந்து வேகத்தோடு துள்ளி விழுந்த நாண் ஓசையால் , பொருந்திய திக்குகளாகிய இடங்கள் பிளந்தன. போர்க்களத்தில் அவரவர்கள் ஆரவாரித்தலாகிய ஒப்பற்ற முழக்கத்தால் உலகங்கள் செவிடுபட்டன!

இருபடைகளும் கலந்தமை
            சோழர் படைகளும் கலிங்கர் படைகளும் ஒன்றை ஒன்று நேரில் எதிர்த்தது, அலைமோதும் கடலுடன் மற்றொரு கடல் எதிர்த்தாற்போல இருந்தது! போரில் சீறிவரும் குதிரைகளுடன் போர் புரிவது கடலில் சுருண்டு விழும் அலைகளுடன் அலைகள் போர் புரிதலைப் போன்று இருந்தது.

யானைப் படையும் குதிரைப்படையும்
            மதம் பொழியும் யானைகளோடு யானைகள் போர் புரிவது பெரிய மலைகளோடு மலைகள் போர் புரிவது போல் இருந்தது. தேர்களோடு தேர்கள் எதிர்த்துப் போர் புரிவது, மேகக் கூட்டங்களோடு மேகங்கள் எதிர்ந்துப் போர் புரிவது போல் இருந்தது.

வீரர்களும் அரசர்களும்

            தாக்கும் புலிகளோடு புலிகள் ஆரவாரித்துப் போர் புரிவது போல், போர் புரியும் வீரர்களோடு வீரர்கள் ஆரவாரித்துப் போர் புரிந்தனர். சிங்கங்களோடு சிங்கங்களின் கூட்டம் போர் புரிவது போல, அரசர்களோடு அரசர்கள் போர் புரிந்தனர்.

 6 .நிலவின் எதிரொலி  சு.வில்வரெத்தினம்



அகதிகளாய் அங்கவை சங்கவை:
பாரி ஆண்ட பறம்புமலையை மூவேந்தர்கள் கைப்பற்றி, பாரியையும் வீழ்த்தி விட்டனர். சூரியன் மறைந்த இருளில் அகதிகளாய் ஆதரவற்றவர்களாய் ஆகினர் பாரிமகளிர்.
பரிதியும் மறைந்த இருளில்
அகதிகளாயினர்
அங்கவையும் சங்கவையும்.

பாரிமகளிரின் சோகம்:
பல வெற்றிகளைக் கண்ட முரசு வீழ்ந்த கையோடு, பாரிமகளிர்க்குப் பறம்புமலை வாழ்வும் இனி இல்லை என்றானது. அதனால் பாரிமகளிர் மலையிலிருந்து நிலவின் வெளிச்சம் சோகமாய் படர்கின்ற ஒற்றையடிப் பாதையின் வழியே இறங்கி தளர்வுற்று நடந்தனர். அவர்களுடன் தள்ளாத வயதில் கபிலரும்  துணையாக நடந்துசென்றார். இளைத்து, சோர்ந்து நரைவிழுந்து போனது வெண்ணிலவும்தான் கபிலரைப் போல.
நரைவிழுந்து போனது
வெண்ணிலவும்தான்
கபிலரும்தான்
பாரிமகளிரும்தாம்
பறம்பு மலை வாழ்வும்தான்.
வாழ்வினை இழந்த மகளிரை ஒளவையாரிடம் பவ்யமாக ஒப்படைத்துவிட்டு கபிலர் மறைந்தார். அவர்களின் பயணம் மேலும் தொடர்ந்தது. போகும் வழியெல்லாம் ஒளவையுடன் கூழ், கஞ்சி குடித்தே சென்றனர் பாரியின் மகளிர்கள். அவர்களுடன் நிலவும் பயணித்தது.

ஒளவையின் அவசரம்:
அதியமான் கொடுத்த அதிசய நெல்லிக்கனி அளித்த ஆயுட்காலம் முடிவிற்கு வந்ததோ? ஒளவை அவசரப்பட்டு அவளைப் போல் தமிழ் ஆற்றல் படைத்த மகளிரை,  பாரியையும் அவர்கள் வாழ்ந்த பறம்புமலை வாழ்வையும் அழித்தவர்க்கே மணம் முடித்துவிட்டாள்.
தன்னைப்போல் தமிழ்செய்த மகளிரைப்
பறம்பு மலை வாழ்வை அழித்தவர்க்கே
தாரை வார்த்துக் கொடுத்தாள்.
அடிமைவாழ்வு:
காலம் கடந்திருந்தாலும் கூழோ, கஞ்சியோ வார்க்கும் தம்முடைய இனக்குடியில் கொடுத்திருந்தாலும் பாரியின் ஆன்மா மகிழ்ச்சியடைந்திருக்கும் .
அந்த நிலாநாளில் பறம்புமலையும், வெற்றிதரக்கூடிய முரசும், அந்தப்புரத்து அடிமைகளாகிவிட்ட அங்கவையும் சங்கவையும் வருத்தப்பட்டு அழுதவை எல்லாம் இந்த நிலாநாளிலும் எதிரொலிக்கவே செய்கின்றன.
அங்கவையும் சங்கவையும்
இரங்கி அழுதவையெல்லாம்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவிலும்
எதிரொலிக்கின்றனவே.
முடிவுரை:
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாரியின் மகளிர் அகதிகளாய்  அலைந்து திரிந்த வரலாறு இன்றும் மாறியதாகத் தெரியவில்லை. இன்றும் எல்லா நாடுகளில் இருந்தும் அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டவர்களின் வரலாறு தொடர்ந்து கொண்டிருப்பதாக இந்த கவிதை முன்வைக்கின்றது
 5 . காகிதப் பூக்கள் நா. காமராசன்

காகிதப் பூக்கள் என்னும் இக்கவிதை திருநங்கைகளின் பிறப்பு, அவர்கள் இந்த சமூகத்தில் படும் துன்பங்கள் ஆகியவற்றை எடுத்துரைப்பதாக அமைகின்றது.
சதுராடும் புதிர்கள்
காலம் என்கிற மழைத்தூறலிலே நாங்கள் நெல்லின் இடையே வளரும் களை களாகப் பிறப்பெடுத்துள்ளோம். தாய்ப்பாலின் வரலாற்றிலே ஆணாகவும் இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் சதுரங்க ஆட்டத்திலே உள்ள புதிராக மாறிப்போனோம் என்று அவர்களது பிறப்பின் வேதனையைக் கவிஞர் கூறுகின்றார்.
சாவின் சிரிப்புகள்
விதைவளர்த்த முள்ளாகவும் விளக்கின் இருளாகவும், சதை வளர்க்கும் பிணங் களாகவும், சாவின் சிரிப்புகளாகவும் நாங்கள் உள்ளோம். இப்படி எல்லா நிலையிலும் எங்கள் வாழ்க்கை முரண்பட்டதாகவே காணப்படுகின்றது என்று கூறுவது போன்று கவிஞர் கூறுகின்றார்.
சந்ததிப் பிழை நாங்கள்
        வாய்பேச இயலாதவர் பாட்டிசைக்க கையில்லாதவர் அதை எழுதிவைக்க கண்பார்வையற்றவர் அதைப் படித்ததை எங்கேனும் பார்த்ததுண்டா? ஆனால் நாங்கள் வாய்பேச இயலாதவரின் பாட்டானோம்; கையில்லாதவர் எழுதிய எழுத்தா னோம்; கண்பார்வையற்றோர் அதைப் படிக்கின்றனர். உலகில் இவையெல்லாம் நடக்காத விஷயங்கள் என்றால் எங்கள் பிறப்பு இவற்றை யெல்லாம் நடந்த விஷயங் களாக மாற்றுகின்றது.
எழுத்துக்களில் வரக்கூடிய சந்திப்பிழை போன்று நாங்கள் எங்களின் பரம்பரையில் சந்ததிப் பிழைகளாக மாறிவிட்டோம். இதை மாற்றக்கூடிய சக்தி எங்களிடம் இல்லை. காலத்தின் பேரேட்டைக் கடவுள் திருத்தட்டும் என்று கூறுகின்றனர்.
பூவைத்தல் முறைதானோ?
நாங்கள் தலைமீது பூ வைப்போம், உலகத்தில் கல்லறை மீது பூ வைப்பது என்பது முறைதானே? எனவே நாங்கள் பூத்த உயிர் கல்லறைகளாகவே இருக்கின் றோம்.
நாங்கள் காகிதப் பூக்கள்
குழந்தையைப் பெற்றெடுக்கக்கூடிய பெண்கள் அழகும் வாசமும் நிறைந்த தலையில் சூடக்கூடிய முல்லைப்பூவாகக் கருதப்படுகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாத மலடி என்று அழைக்கப்படும் பெண்கள் வாசம் உடைய ஆனால் தலையில் சூட இயலாத தாழம்பூவாகக் கருதப்படுகின்றனர்.
ஆனால் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய நாங்கள் என்னதான் பெண் பெண் என்று கூறினாலும், பார்ப்பதற்கு பூ போன்று இருந்தும் பூக்குரிய எந்தத் தகுதியும் இல்லாத காகிதப் பூக்களாகவே கருதப்படுகின்றோம்.
......................................................................................................................................
4.மரங்களின் சுற்றம் கவிஞர் இன்குலாப்




முன்னுரை
            கவிஞர் இன்குலாப் “மரங்களின் சுற்றம் என்ற தலைப்பில் மனித உறவுகளை விட மரங்களின் உறவு  மிக மேலானது என்பதை விவரிக்கிறார். மரங்களின் மேன்மையையும் , அதனால் பிறர்க்கு பயனேயன்றி, தீங்கு சிறு துளியும் இல்லை என்பதையும் அழகாக விளக்கியுள்ளார்.

சந்திக்க செல்வதில்லை
            மனிதர்களைப் போல் ஒரு மரம் மற்றொரு மரத்தை சென்று சந்திக்க செல்வதில்லை. ஆனால் தனியாக நிற்பது போல் தோற்றம் தந்து பல உறவினர்களையும் கொண்டிருப்பது  மரங்களால் மட்டுமே இயலும்.

மரங்களின் சுற்றம்
·         மரங்களின் இலைகளிலும் தளிர்களிலும் எறும்புகள் ஊறுகின்றன.
·         பூக்களில் வண்ணத்துப் பூச்சிகளும் வண்டு, தேனீ, ோன்றவை தேன் பருகும்.
·         மரத்தின் காய், கனிகளை, கிளிகள் சிறகுகள் போர்த்திக் கொண்டு சுவைக்கும்.
·         அடிமரத்தில் தளிர்கள் தலை நீட்டும். அம்மரத்தில் குயில்கள் அழகாக ஆனந்தமாக கூவும்.
·         குடைபோன்ற பெரிய மரத்தில் கொசுக்களும் பூச்சிகளும் கொண்டாட்டம் போடும்.
·         உலர்ந்து போய் பட்டு போன மரத்தின் பொந்தில் ஆந்தைகள் முட்டையிட்டு வைத்திருக்கும்.
இவ்வளவு  சுற்றங்களையும் கொண்டிருப்பது  மரங்களால் மட்டுமே இயலும்.

முடிவுரை
            மரத்தினால் மனிதர் மட்டுமல்ல எறும்பு, பூச்சிகள் , கிளி, குயில் இளைப்பாறும் விலங்குகள் என ஏராளமானோர் பயன் அடைகின்றனர். இதன் கிளையடியில் தேன் கூடு கட்டும், கிளைகளின் மேலே பறவைகள் கூடு கட்டும். என ஏராளம் சுற்றமும் நட்பும் நடமாடாமல் பெறுவது மரங்களால் மட்டுமே முடியும்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            
3  . கிளிக்கூண்டு
.பிச்சமூர்த்தி 
 


இந்தக் கவிதையில் கவிஞன் ஒரு பாத்திரம். அவன் எதிரே மூன்று பிரிவினர் இருக்கின்றனர், பேசுகின்றனர், இயங்குகின்றனர். மணல்கூண்டு கட்டும் குழந்தைகள், பெரியோர், சிறியோர் என்போர் அவர்கள். அவர்களைக் கவனிப்பதும், பின்பற்றுவதும், அவர்களுக்குச் செவிமடுப்பதும், அவர்களுள் சிலர் கருத்தைத் தள்ளுவதும், சிலர் கருத்தைக் கொள்ளுவதும் ஆகக் கவிஞனும் செயல்படுகிறான். இதுவே கவிதையின் அமைப்பு. இனிக் கவிதையின் பொருளமைப்பைக் காண்போம்.

 மணல் கூண்டு கட்டும் குழந்தைகள்  :
 அது காவிரியாற்றுக் கரைமணல். மாலை நேரம். மெல்ல இருள் மடல் மடலாகக் கவிகிறது. விண்மீன்கள் ஒளிர்கின்றன.   மேற்கே சுடலையில் பிணம் எரியும் காட்சி;    கிழக்கே பெண்களின் மகிழ்ச்சியான பேச்சு.   மணலில் குழந்தைகளின் கும்மாளம்.   இந்தச் சூழ்நிலையில் குழந்தைகள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கின்றனர்.   நீர் தெளித்து மணலைக் குவித்துக் கூண்டு கட்டு; வாசலைத் திற; இரவில் கிளி வந்து அடையும்.
                                  கோவைப்பழ மூக்கும் பாசிமணிக் கண்ணும்,
சிவப்புக் கோட்டுக் கழுத்தும் வேப்பிலை வாலும்
                           கொண்ட கிளியைக் காலையில் வந்து பிடிப்போம் என்கின்றனர்.

 கவிஞன் செயல்  :
 குழந்தைகளின் செயலைப் பார்க்கிற கவிஞன்அது படைப்புச் செயல் என உணர்ந்து, அவர்களைப் பின்பற்றித் தன் படைப்பை உருவாக்குகிறான்.   வாழ்க்கையிலிருந்து பிறப்பது அவன் கவிதை.   வார்த்தையையும் ஓசையையும் பிசைந்து தீராத வேட்கையுடன் அவனும் பாட்டு என்ற கூண்டை அமைக்கிறான். அந்தப் பாட்டுக் கூண்டுக்குள் அவன் எதிர் பார்ப்பது அழகுஎன்னும் கிளி.
                                  வாழ்க்கையும் காவிரி . . .
வார்த்தையே மணல், ஓசையே ஜலம்
என் தீராத வேட்கையே குவிக்கும் விரல்கள்;
பாட்டென்னும் கூண்டொன்றமைத்தேன்,
அழகென்னும் கிளியை அழைத்தேன் . . .
                           குழந்தைகள் ஏமாற்றம் 
 விடிந்தது; ஒளி ஆற்றில் மேகப்பெண்கள் குளித்தனர்; மரங்கள் இனிமையாக ஒலி எழுப்பின; கரிச்சான்கள் பாடின. குழந்தைகள் வந்து கூண்டைப் பார்த்தனர். கிளி இல்லை. இரண்டு குழந்தைகள் மட்டும்,   ‘இரவில் கிளி வந்து கூண்டின் வாசல் சிறிதாயிருந்ததால் பறந்து போய் விட்டது’  என வருந்தினர்.   இதைக்கேட்டு ஏனைய எல்லாக் குழந்தைகளும் எள்ளி நகையாடினர்.   கிளியாவது, கிளியின் சுவடாவது, மூடரே!என இகழ்ந்தனர்.

கவிஞனின் ஏமாற்றம்  :
 குழந்தைகளுக்கு நேர்ந்ததே கவிஞனுக்கும் நேர்கிறது. மாலையில் எழுதிய பாட்டைக் காலையில் எழுந்து படிக்கிறான். அவன் எதிர்பார்த்த அழகை அதில் காணாமல் திகைக்கிறான். தனக்குத் தானே கேட்டுக் கொள்கிறான். அழகு என்ன அவ்வளவு சாதாரணப் பொருளா?
 மணல் கூண்டில் கிளிவந்து நுழையுமா?
உள்ளத்தின் வேட்கை வார்த்தையில் தோணுமா?
. . . அழகென்ன மீனா?
ஓசையின் தூண்டிலில் சிக்குமா? . . .
 எனத் தன் ஏமாற்றத்தைப் பேசுகிறான். மணல் கூண்டில் கிளி வர முடியாதது போலவே உள்ளத்தின் வேட்கையாலும் வார்த்தையாலும் ஓசையாலும் அமைந்த பாட்டிற்குள் அழகு சிக்காது என உணர்கிறான்.
பெரியோர்கள் இரக்கம் :
 கவிஞனின் செயலைப் பொருளற்ற முயற்சியாகப் பார்க்கின்றனர் பெரியோர்’.   வயிற்றுப் பிழைப்பைப் பாராமல் காலத்தைப் போக்கிச் சொல்லோடு மன்றாடுகின்ற முட்டாள்,   பிழைக்கத் தெரியாத பெரும்பித்து என்கின்றனர். கவிதை படைக்கத் தேவையான இலக்கணம் கூட அறியாதவன் (நன்னூல் தெரியாத நண்பா’) என இகழ்கின்றனர்.
சிறியோர்கள் போற்றல் :
 மற்றொருபுறம் கவிஞனைச் சிறியோர் சிலர் புகழ்கின்றனர்.
 அட பித்தே!
தொட்ட வார்த்தையில் தங்கத்தைத் தேக்கினாய்,
தொடாத தந்தியில் ஒலியை எழுப்பினாய்,
எண்ணாத உள்ளத்தில் எழிலினை ஊற்றினாய்,
அழகின் அம்பை வார்த்தையில் பூட்டினாய்.
அழகுப் பித்தே வாழ்க

 என வாழ்த்துகின்றனர்.   தோல்வி அடைந்து விட்டதாகக் கவிஞனும் பெரியோர்களும் நினைக்கும் போதுபாட்டைப் படிக்கும் சிறியோர் கவிஞனது முயற்சியின் பெருமையைப் பாராட்டுகின்றனர். அவனது வார்த்தையில் தங்கம்அவனது வீணையில் இசை இருப்பதைப் பார்க்கின்றனர். எதிர்பாராதபடி உள்ளங்களில் தன் கவிதை மூலம் அழகை ஊற்றியிருக்கிறான் என்கின்றனர். அழகை அம்பாகக் கொண்டு வார்த்தையில் பூட்டி அவன் இலக்கை நோக்கி எய்திருக்கிறான் என உறுதி கூறுகின்றனர். பெரியோர்கள் பைத்யம்என இகழ்ச்சியாகச் சொல்லும் சொல்லையே அழகுப்பித்துஎன மாற்றிச் சிறியோர்கள் புகழ்கின்றனர்.
 கவிஞனது முடிவு  :
 சிறியோர் வார்த்தைகளைக் கேட்ட கவிஞன் நம்பிக்கை பெற்றுத் தெளிகிறான். பெரியோர்களின் இரங்கலைப் பறக்கணிக்கிறான். கிளி வராவிட்டாலும் தொடர்ந்து கூண்டு அமைக்கும் குழந்தைகளின் கற்பனை உண்மையைப் பின்பற்றி, ‘அழகு வராவிட்டாலும் நாள்தோறும் அதற்காகக் கூண்டமைத்து அழகை அழைத்துக் கொண்டேயிருப்பேன்என உறுதி கொள்கிறான்.
                           ஆறெங்கும் கிளிக்கூண்டு கட்டுவேன்
அழகினை அழைப்பேன்
எந்நாளும். . .