Monday, September 7, 2015

3  . கிளிக்கூண்டு
.பிச்சமூர்த்தி 
 


இந்தக் கவிதையில் கவிஞன் ஒரு பாத்திரம். அவன் எதிரே மூன்று பிரிவினர் இருக்கின்றனர், பேசுகின்றனர், இயங்குகின்றனர். மணல்கூண்டு கட்டும் குழந்தைகள், பெரியோர், சிறியோர் என்போர் அவர்கள். அவர்களைக் கவனிப்பதும், பின்பற்றுவதும், அவர்களுக்குச் செவிமடுப்பதும், அவர்களுள் சிலர் கருத்தைத் தள்ளுவதும், சிலர் கருத்தைக் கொள்ளுவதும் ஆகக் கவிஞனும் செயல்படுகிறான். இதுவே கவிதையின் அமைப்பு. இனிக் கவிதையின் பொருளமைப்பைக் காண்போம்.

 மணல் கூண்டு கட்டும் குழந்தைகள்  :
 அது காவிரியாற்றுக் கரைமணல். மாலை நேரம். மெல்ல இருள் மடல் மடலாகக் கவிகிறது. விண்மீன்கள் ஒளிர்கின்றன.   மேற்கே சுடலையில் பிணம் எரியும் காட்சி;    கிழக்கே பெண்களின் மகிழ்ச்சியான பேச்சு.   மணலில் குழந்தைகளின் கும்மாளம்.   இந்தச் சூழ்நிலையில் குழந்தைகள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கின்றனர்.   நீர் தெளித்து மணலைக் குவித்துக் கூண்டு கட்டு; வாசலைத் திற; இரவில் கிளி வந்து அடையும்.
                                  கோவைப்பழ மூக்கும் பாசிமணிக் கண்ணும்,
சிவப்புக் கோட்டுக் கழுத்தும் வேப்பிலை வாலும்
                           கொண்ட கிளியைக் காலையில் வந்து பிடிப்போம் என்கின்றனர்.

 கவிஞன் செயல்  :
 குழந்தைகளின் செயலைப் பார்க்கிற கவிஞன்அது படைப்புச் செயல் என உணர்ந்து, அவர்களைப் பின்பற்றித் தன் படைப்பை உருவாக்குகிறான்.   வாழ்க்கையிலிருந்து பிறப்பது அவன் கவிதை.   வார்த்தையையும் ஓசையையும் பிசைந்து தீராத வேட்கையுடன் அவனும் பாட்டு என்ற கூண்டை அமைக்கிறான். அந்தப் பாட்டுக் கூண்டுக்குள் அவன் எதிர் பார்ப்பது அழகுஎன்னும் கிளி.
                                  வாழ்க்கையும் காவிரி . . .
வார்த்தையே மணல், ஓசையே ஜலம்
என் தீராத வேட்கையே குவிக்கும் விரல்கள்;
பாட்டென்னும் கூண்டொன்றமைத்தேன்,
அழகென்னும் கிளியை அழைத்தேன் . . .
                           குழந்தைகள் ஏமாற்றம் 
 விடிந்தது; ஒளி ஆற்றில் மேகப்பெண்கள் குளித்தனர்; மரங்கள் இனிமையாக ஒலி எழுப்பின; கரிச்சான்கள் பாடின. குழந்தைகள் வந்து கூண்டைப் பார்த்தனர். கிளி இல்லை. இரண்டு குழந்தைகள் மட்டும்,   ‘இரவில் கிளி வந்து கூண்டின் வாசல் சிறிதாயிருந்ததால் பறந்து போய் விட்டது’  என வருந்தினர்.   இதைக்கேட்டு ஏனைய எல்லாக் குழந்தைகளும் எள்ளி நகையாடினர்.   கிளியாவது, கிளியின் சுவடாவது, மூடரே!என இகழ்ந்தனர்.

கவிஞனின் ஏமாற்றம்  :
 குழந்தைகளுக்கு நேர்ந்ததே கவிஞனுக்கும் நேர்கிறது. மாலையில் எழுதிய பாட்டைக் காலையில் எழுந்து படிக்கிறான். அவன் எதிர்பார்த்த அழகை அதில் காணாமல் திகைக்கிறான். தனக்குத் தானே கேட்டுக் கொள்கிறான். அழகு என்ன அவ்வளவு சாதாரணப் பொருளா?
 மணல் கூண்டில் கிளிவந்து நுழையுமா?
உள்ளத்தின் வேட்கை வார்த்தையில் தோணுமா?
. . . அழகென்ன மீனா?
ஓசையின் தூண்டிலில் சிக்குமா? . . .
 எனத் தன் ஏமாற்றத்தைப் பேசுகிறான். மணல் கூண்டில் கிளி வர முடியாதது போலவே உள்ளத்தின் வேட்கையாலும் வார்த்தையாலும் ஓசையாலும் அமைந்த பாட்டிற்குள் அழகு சிக்காது என உணர்கிறான்.
பெரியோர்கள் இரக்கம் :
 கவிஞனின் செயலைப் பொருளற்ற முயற்சியாகப் பார்க்கின்றனர் பெரியோர்’.   வயிற்றுப் பிழைப்பைப் பாராமல் காலத்தைப் போக்கிச் சொல்லோடு மன்றாடுகின்ற முட்டாள்,   பிழைக்கத் தெரியாத பெரும்பித்து என்கின்றனர். கவிதை படைக்கத் தேவையான இலக்கணம் கூட அறியாதவன் (நன்னூல் தெரியாத நண்பா’) என இகழ்கின்றனர்.
சிறியோர்கள் போற்றல் :
 மற்றொருபுறம் கவிஞனைச் சிறியோர் சிலர் புகழ்கின்றனர்.
 அட பித்தே!
தொட்ட வார்த்தையில் தங்கத்தைத் தேக்கினாய்,
தொடாத தந்தியில் ஒலியை எழுப்பினாய்,
எண்ணாத உள்ளத்தில் எழிலினை ஊற்றினாய்,
அழகின் அம்பை வார்த்தையில் பூட்டினாய்.
அழகுப் பித்தே வாழ்க

 என வாழ்த்துகின்றனர்.   தோல்வி அடைந்து விட்டதாகக் கவிஞனும் பெரியோர்களும் நினைக்கும் போதுபாட்டைப் படிக்கும் சிறியோர் கவிஞனது முயற்சியின் பெருமையைப் பாராட்டுகின்றனர். அவனது வார்த்தையில் தங்கம்அவனது வீணையில் இசை இருப்பதைப் பார்க்கின்றனர். எதிர்பாராதபடி உள்ளங்களில் தன் கவிதை மூலம் அழகை ஊற்றியிருக்கிறான் என்கின்றனர். அழகை அம்பாகக் கொண்டு வார்த்தையில் பூட்டி அவன் இலக்கை நோக்கி எய்திருக்கிறான் என உறுதி கூறுகின்றனர். பெரியோர்கள் பைத்யம்என இகழ்ச்சியாகச் சொல்லும் சொல்லையே அழகுப்பித்துஎன மாற்றிச் சிறியோர்கள் புகழ்கின்றனர்.
 கவிஞனது முடிவு  :
 சிறியோர் வார்த்தைகளைக் கேட்ட கவிஞன் நம்பிக்கை பெற்றுத் தெளிகிறான். பெரியோர்களின் இரங்கலைப் பறக்கணிக்கிறான். கிளி வராவிட்டாலும் தொடர்ந்து கூண்டு அமைக்கும் குழந்தைகளின் கற்பனை உண்மையைப் பின்பற்றி, ‘அழகு வராவிட்டாலும் நாள்தோறும் அதற்காகக் கூண்டமைத்து அழகை அழைத்துக் கொண்டேயிருப்பேன்என உறுதி கொள்கிறான்.
                           ஆறெங்கும் கிளிக்கூண்டு கட்டுவேன்
அழகினை அழைப்பேன்
எந்நாளும். . .


No comments:

Post a Comment